மத்திய உள் துறை அமைச்சகத்திலுள்ள கீழ்நிலை ஊழியர்கள் ஆபாச இணையதளங்களைப் பார்த்து வைரஸ்களை தரவிறக்குவதால், அலுவலகத்திலுள்ள கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் சமரசம் செய்ய வேண்டி இருந்ததாகத் தெரிவித்துள்ளார் முன்னாள் உள் துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை.
கடந்த வாரம் சில மத்திய அமைச்சகங்களின் இணையதளங்கள் முடக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், அரசுதளங்கள் எதுவும் முடக்கப்படவில்லை என்றும், சிறு தொழில்நுட்பக் கோளாறுகளே ஏற்பட்டதாகவும் மத்திய அரசின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஃபேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனங்கள் இணைந்து பயனர்களின் தகவல்களைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
மும்பையில் நடந்த கூட்டமொன்றில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் உள் துறைச் செயலாளரான கோபாலகிருஷ்ண பிள்ளை. நாஸ்காம் உதவியுடன் செயல்படும் இந்திய தரவு பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக இருந்து வருகிறார் இவர். நிகழ்ச்சியில் பேசியபோது, உள் துறைச் செயலாளராகத் தான் சந்தித்த அனுபவங்களை ஜி.கே.பிள்ளை பகிர்ந்துள்ளார். தனது பணிக்காலத்தில், உள் துறை அலுவலக ஊழியர்கள் ஆபாச இணையதளங்களை அடிக்கடி பார்த்து வந்ததாகக் கூறியுள்ளார்.
“மத்திய உள் துறை அமைச்சகத்தின் சார்பான கூட்டங்கள் இரவு வரை நீளும். அதன்பின், கூட்டத்துக்குப் பிறகான அலுவலக நடவடிக்கைகளைக் கீழ்நிலை ஊழியர்கள் மேற்கொள்வார்கள். அப்போது, அவர்கள் என்ன செய்வார்கள்? நேராக ஆபாச இணையதளத்துக்குச் சென்று பார்ப்பார்கள். அதில், வைரஸ் இருக்கும் தரவுகளைப் பதிவிறக்கம் செய்வார்கள். இதனால் ஒரு கம்ப்யூட்டரைப் பாதிக்கும் வைரஸ், அந்த நெட்வொர்க்கில் உள்ள எல்லா கம்ப்யூட்டர்களையும் தாக்கும். எட்டாண்டுகளுக்கு முன்பு, உள் துறை அலுவலகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கம்ப்யூட்டர்கள் செயலிழந்துபோகும். அடிக்கடி இவ்வாறு நடப்பது ஏன் என்று ஆராய்ந்தபோது, ஊழியர்களின் நடவடிக்கைகள் வெளியே தெரியவந்தது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இணையப் பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு நிறுவனத்தின் நிர்வாகக் குழுவும் மதிப்பாய்வு செய்ய வேண்டுமென்றும், மத்திய கார்ப்பரேட் விவகாரத் துறை, செபி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியினால் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் ஆண்டறிக்கையில் இதுபற்றிய தகவல்கள் வெளியிடப்படுவதில்லை என்றும், தனது பேச்சில் ஜி.கே.பிள்ளை குறிப்பிட்டார்.
