ஊழல்: ரூ.100 கோடி சொத்து சேர்த்த அரசு ஊழியர்!
ஆந்திர மாநிலத்தில் மின்வாரிய ஊழியர் ஒருவர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லூர் மாவட்டத்தின் போகோலு மண்டலில் உள்ள மின்துறை நிர்வாகப் பொறியாளர் அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருபவர் லட்சுமி ரெட்டி (56). 1993ஆம் ஆண்டு காவலியில் உள்ள துணைமின் நிலையத்தில் உதவியாளர் பணியில் சேர்ந்த லட்சுமி ரெட்டி, பின்னர் 1996ஆம் ஆண்டு உதவி லைன்மேனாகவும், 1997ஆம் ஆண்டு லைன்மேனாகவும் பதவி உயர்வு பெற்றார்.
இந்த நிலையில் லட்சுமி ரெட்டி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தப் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் லட்சுமி ரெட்டி வீடுகளில் நேற்று (ஜூன் 22) அதிரடி சோதனை நடத்தினர். அவரது வீடுகள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதில், 60 ஏக்கர் விவசாய நிலம், சொகுசு பங்களா, எண்ணற்ற முதலீடுகள் தொடர்பான பத்திரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இந்தச் சொத்துகளின் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து லட்சுமி ரெட்டி உடனடியாகக் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மே மாதம் நெல்லூர் வட்டாரப் போக்குவரத்துத் துறை ஆணையர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக இருந்த நரசிம்ம ரெட்டி என்பவர் 100 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
