ஆசிரியரை கைது செய்யச் சொன்ன முதல்வர்!


இடமாற்றம் வேண்டுமெனக் கேட்ட ஒரு பெண் ஆசிரியருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால், அவரைக் கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர ராவத் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள உத்தர்கஷி மாவட்டத்திலுள்ள நவ்கான் எனும் சிற்றூரில் வாழ்ந்து வருபவர் உத்தரா பகுகுணா. 57 வயதாகும் இவர், அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியொன்றில் தலைமையாசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது கணவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது பிள்ளைகள் அனைவரும் மாநிலத் தலைநகரமான டேராடூனில் வசித்து வருகின்றனர். இதனால் தன்னை டேராடூனுக்குப் பணிமாற்றம் செய்து தருமாறு கல்வித் துறை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார் உத்தரா பகுகுணா. ஆனால், அது நடந்தேறவில்லை.

நேற்று (ஜூன் 28) டேராடூனில் நடந்த ’ஜனதா தர்பார்’ எனும் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டார் உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர ராவத். அப்போது, அங்கு வந்த உத்தரா பகுகுணா, தனக்குப் பணியிட மாற்றம் வேண்டுமெனக் கோரினார். மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியருக்குப் பணியிட மாற்றம் பற்றிப் பேச முடியாது என்று மறுத்தார் ராவத். ஆனால், தான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பரவல் குறைவான பகுதிகளில் வசித்து வருவதாகவும், ஓய்வு பெறும் வயதில் தன்னை டேராடூனுக்கு மாற்ற வேண்டுமெனவும் கூறினார் பகுகுணா. ஒருகட்டத்தில் இருவரிடையேயான பேச்சு வாக்குவாதமாக மாறியது. அப்போது, தரக்குறைவான வார்த்தைகளால் ராவத்தை விமர்சித்தார் உத்தரா பகுகுணா. இதனால் தனது பொறுமையை இழந்தார் ராவத். “இவரை இப்போதே சஸ்பெண்ட் செய்யுங்கள். உடனடியாக அரெஸ்ட் செய்யுங்கள்” என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து முதலமைச்சரைத் திட்டியவாறே அங்கிருந்து அகன்றார் உத்தரா பகுகுணா. இந்த நிகழ்வானது வீடியோவாக படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரவியது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, உத்தரா பகுகுணாவைக் கைது செய்தனர் உத்தராகண்ட் போலீசார். நேற்று மாலையில், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து, இன்று (ஜூன் 29) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் உத்தரா. அப்போது, பணியைச் செய்வதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையென்று தெரிவித்தார். “25 ஆண்டுகளாக, இந்த ஒதுக்குப்புறமான கிராமத்தில் வசித்து வருகிறேன். இப்போது எனக்கென்று யாருமில்லை. நான் தனியாக வசிக்கிறேன். அதனால் எனக்கு பணி மாற்றம் வேண்டுமெனக் கேட்டேன். ஆனால், அந்த முதலமைச்சர் எதுவும் செய்யவில்லை. திடீரென்று கையை உயர்த்தி, ‘நீ ஒரு ஆசிரியர், ஒழுங்காக நடந்துகொள்’ என்கிறார். அதனால் அவரைப் பற்றி விமர்சித்தேன்” என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய முதலமைச்சர் ராவத், அரசு ஊழியர்களின் பணியிட மாற்றம் அனைத்தும் மாநில பணியிட மாற்றச் சட்டப்படி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மரியாதைக்குறைவாக நடந்து கொண்டதற்காகவும், அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காகவும் மட்டுமே, அந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறினார்.

ஒரு வயதான ஆசிரியரிடம் பொறுமையில்லாமலும் மூர்க்கத்தனமாகவும் ராவத் நடந்துகொண்டதாக விமர்சித்துள்ளனர் உத்தராகண்ட் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள். “ஒரு வயதான விதவை ஆசிரியர் ஒரே ஊரில் 25 ஆண்டுகளாகப் பணி செய்யும் அளவுக்கு இன்றைய சூழல் உள்ளது. அந்த ஆசிரியரின் பணியிடை நீக்கத்தை உடனடியாக அகற்றுமாறு முதலமைச்சரை அறிவுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார் காங்கிரஸை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் ஹரீஷ் ராவத்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...