கடந்த 12 ஆண்டுகளாகவே உலகின் பல்வேறு நாடுகளில் திறன் குறைபாடு என்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதாகவும், அதில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும் ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஜூன் 26ஆம் தேதி மேன்பவர் குரூப் வெளியிட்டுள்ள ’திறன் குறைபாடு சர்வே’ அறிக்கையில் நிறுவனங்களில் ஊழியர்களுக்கான திறன் சார்ந்த சர்வதேச ஆய்வு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வானது சர்வதேச அளவில் சுமார் 40,000 நிறுவனத் தலைமைகளிடம் கருத்துக் கேட்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், ‘சர்வதேச அளவில் 45 சதவிகிதம் அளவிலான நிறுவனங்கள் திறமையான ஊழியர்களைப் பணியமர்த்துவதில் தடுமாறி வருகின்றன. திறமையான ஊழியர்களுக்கான பற்றாக்குறை உலகளவில் அதிகமாகத் திகழ்கிறது. மாறி வரும் புதிய உலகத்துக்கு ஏற்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் திறனை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும்.
உலகளவில் திறன் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு ஜப்பான்தான். அங்குள்ள 89 சதவிகிதம் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான திறனுள்ள பணியாளர்களை நியமிப்பதில் தடுமாறி வருவதாகத் தெரிவித்துள்ளன. ஜப்பானைத் தொடர்ந்து ரோமானியா (81%), தைவான் (78%) உள்ளிட்ட நாடுகள் ஊழியர் சக்தியில் திறன் குறைபாடு கொண்ட நாடுகளாக உள்ளன. ஹாங்காங், பல்கேரியா, துருக்கி, கிரீஸ், சிங்கப்பூர், ஸ்லோவாகியா உள்ளிட்ட நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் இருக்கின்றன. இந்தியா 56 சதவிகிதத்துடன் எட்டாவது இடத்தில் இருக்கிறது. திறனற்ற ஊழியர்கள் கொண்ட நாடுகளில் சீனா நல்ல நிலையில் உள்ளது. சீனாவில் 13 சதவிகித ஊழியர்கள் மட்டுமே திறனற்றவர்களாக இருக்கின்றனர். அயர்லாந்து, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் திறனற்ற ஊழியர்களைக் குறைவாகக் கொண்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது
