தந்தையர் தினம்: அப்பாவுக்கு ஒரு மகளின் கடிதம்...


கவிபிரியா

உன்னைக் கருவில் சுமக்கும் பாக்கியம் இல்லை. ஆதலால் நெஞ்சில் சுமந்து என் ஆசையைத் தீர்த்துக்கொள்கிறேன் என்று நீங்கள் கூறிய வார்த்தைகள் இன்றும் என் காதுகளில் ஒலிக்கின்றன.

வாழ்க்கைச் சக்கரத்தில், ஓட்டுநர் என்னும் சாதாரண வேலையை வைத்துக்கொண்டு, நாங்கள் வசதியாக வாழ்வதற்காக, நீங்கள் ஓயாமல் சுழன்றது எப்போதுமே என் நினைவில் நிற்கும்.

சிறு வயதாய் இருக்கும்போது அம்மாவுக்கு ஒருபடி மேலே போய், பனிக்காலத்தில் அதிகாலையில் விறகு அடுப்பில் வெந்நீர் வைத்து, யூனிஃபார்மை அயர்ன் செய்த பிறகு என்னையும் தங்கையையும் குளிக்க எழுப்புவீர்கள்.

உனக்கு இரண்டும் பெண் குழந்தையா என்று இந்தச் சமூகம் உங்களை அனுதாபத்துடன் கேட்டபோது இரண்டும் என் இரு கண்கள் என்று கூறி சோறு ஊட்டிய காலம் சொர்க்கம்.

மழைக்காலத்தில் ஒரு கையில் குடையையும், ஒரு கையில் வண்டியையும் பிடித்துக்கொண்டு பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்ததை மறக்க முடியாது.

பள்ளிக்காலம் முடிந்து கல்லூரிப் படிப்புக்காக ஹாஸ்டலுக்குச் சென்றபோது, என்னை விட்டுப் பிரிவதாக நினைத்து ஏங்கி ஏங்கி அழுதது, மற்றவர்கள் உங்களுக்கு ஆறுதல் கூறியது… இதையெல்லாம் நினைக்கும்போது. இப்போதும் என் கண்கள் கலங்குகின்றன.



உங்களுக்குத் திருமணமாகிப் பத்து ஆண்டுகள் கழித்துப் பிறந்ததாலோ என்னவோ, நாங்கள் சொந்தக் காலில் நிற்கும் நிலை வந்த பிறகும் இன்றுவரை உங்கள் கைக்குள்ளேயே வைத்துப் பார்த்துக்கொள்கிறீர்கள்.

அம்மாகூட சொல்லிக் காட்டியிருக்கிறார் பத்து மாதங்கள் சுமந்து பெற்றேன் என்று. ஆனால் எங்களுக்காக உடல் தேய உழைத்த நீங்கள் ஒரு வார்த்தைகூடச் சொல்லிக்காட்டியதில்லை.

உங்கள் கைப்பிடித்து நடக்கும் அனுபவம் கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாது. நீங்களும் நானும் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு கடைக்குச் செல்வது இன்றும் கண்ணுக்குள் நிற்கிறது.

ஒரு பொண்ணுனா இப்படிதான் இருக்கணும், வாழ்க்கைனா இப்படிதான் இருக்கும், இப்படிதான் வாழ வேண்டும் என்று ஆலோசனை சொல்லிச் சொல்லி எனக்கு வெறுப்பை உண்டாக்காமல் வாழ்க்கைப் பாடத்தை மட்டுமே சொல்லி வளர்த்ததால் என்னவோ, உங்களை மீறி எதையும் என்னால் செய்ய முடியவில்லை.

பண்டிகைக் காலங்களிலும் பழைய ஆடையை அணிந்து எங்களுக்குப் புத்தாடை வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தீர்கள். என் முதல் மாதச் சம்பளத்தில் உங்களுக்குச் சட்டை வாங்கிக் கொடுத்துத் திருப்தி அடைந்தேன். ஆனால், நான் எத்தனைச் சட்டை எடுத்துக் கொடுத்தாலும் அந்தக் கடன் தீராது.

இப்படிச் சிறு வயது முதல், வேலைக்காக உங்களைப் பிரிந்து வரும்வரை உங்களுக்கும் எனக்கும் இடையேயான நினைவுகளை எண்ணக் காலம் போதாது.

நான் உங்களுடன் இருக்கும் வேளையில், உங்களைக் குளிக்கவைத்து, சாப்பாடு ஊட்டி உறங்க வைப்பேன். ஆனால், நான் வேலைக்காக வெளியூர் வந்த பிறகு இந்தச் சுகங்களை இழந்துவிட்டேன்.

ஒவ்வொரு நாளும், நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்பும் உங்களை இறுதிக் காலம் வரை சந்தோஷமாக வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.

உலகம் முழுவதும் இன்று (ஜூன் 17) தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், என் அழுகை, சிரிப்பு, சந்தோஷம் என அனைத்திலும் பங்கெடுக்கும் உங்களைப் போன்ற ஓர் அப்பா கிடைத்த எனக்கு ஒவ்வொரு நாளும் தந்தையர் தினமே…

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...