திருடனைப் பிடித்த சிறுவனுக்குப் பணி ஆணை!
சென்னையில் செயினை பறித்துவிட்டுச் சென்ற திருடனை விரட்டிப் பிடித்த சிறுவனுக்குத் தனியார் நிறுவனத்தில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரில் அமுதா என்பவர் கிளினிக் நடத்தி வருகிறார். இங்கு, நோயாளி போல வந்த ஜானகிராமன் என்பவர் மருத்துவரின் கழுத்தில் இருந்த 10 சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். அப்போது, சிறுவன் சூர்யா திருடனை விரட்டிச் சென்று, சட்டைக் காலரைப் பிடித்து, காலில் மிதித்து வீழ்த்தி முகத்தில் குத்தி, திருடனிடமிருந்து செயினை கைப்பற்றினார்.
சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் ஜெயராமன், தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் உள்ளிட்ட உயரதிகாரிகள் சிறுவன் சூர்யாவை நேரில் அழைத்துப் பாராட்டினர். சிறுவனுக்குக் காவல் ஆணையர் விஸ்வநாதன் பரிசு அளித்தார்.
திருமங்கலம் குடிசைப் பகுதியைச் சேர்ந்த சிறுவன் சூர்யா குடும்பச் சூழல் காரணமாக ஏழாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு மெக்கானிக் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். அவருக்கு டி.வி.எஸ். நிறுவனத்தின் வேலைப் பெற்றுத்தர காவல் துறை முயற்சி செய்தது.
இந்த நிலையில், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் முன்னிலையில் டி.வி.எஸ். நிறுவனத்தின் மெக்கானிக் துறையிலேயே சூர்யாவுக்குப் பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பில் சிறுவன் சூர்யாவுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
"ஷூ அணிந்து வேலைக்குப் போக வேண்டும் என்பது எனது கனவு, ஆனால் அது நடக்கவே இல்லை. இன்று ஷூ, யூனிபார்ம் அணிந்து பணிக்கு செல்ல போகிறேன். எனது கனவு நிறைவேறியது" என்று சிறுவன் சூர்யா நெகிழ்ந்துள்ளார்.
