மணப்பாறை: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே ராசிப்பட்டியை சேர்ந்த மலையாண்டி மகன் ராமன்(18). மதுரையில் பார்மசிஸ்ட் படித்து வந்தார். மலையாண்டி, கிராமத்திலிருந்து சற்று தள்ளி தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது குடும்பத்திற்கும், ஊரில் உள்ள இரண்டு குடும்பத்திற்கும் முன்விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் செயல்படும் ஜோதிடர்கள் மற்றும் மாந்திரீக வேலை செய்யும் நபர்கள் தங்கள் குடும்பத்திற்கு செய்வினை உள்ளிட்டவற்றை செய்து வருவதாக வேதனைப்பட்ட ராமன் நேற்று அப்பகுதியில் உள்ள உயரமான வேலமலைக்கு சென்று மரத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக வாட்ஸ் அப்பில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். கடிதத்தில், 'எனது இறப்பிற்கு எனது குடும்பமோ அல்லது எனது உறவினர்களோ, நண்பர்களோ காரணம் இல்லை.
எனது இறப்பிற்கு ராசிப்பட்டி ஊருக்குள் உள்ள இரண்டு குடும்பங்கள் தான் காரணம். நான் இறந்த பின்பும் எனது ஆத்மா அந்த இரண்டு குடும்பத்தை அடியோடு அழிக்கும். எனது முகத்தை எனது நண்பர்கள் அனைவரும் இறுதியாக பார்க்க வேண்டும். தூக்கு மாட்டி இறப்பவன் அனைவரும் கோழை இல்லை. நான் இறந்த பின்பு எனது மரணம் பற்றிய விவாத வழக்குகளை காவல்துறையினர் எடுக்கக்கூடாது. நான் மரணம் அடைந்த பின்பும் எனது நண்பன் எனது குடும்பத்தினை என்னை போல் இறுதி வரை பார்த்து கொள்வான்.எனது உடலை பெற்றோர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.தகவலறிந்த துவரங்குறிச்சி போலீசார் வனத்துறையினர் உதவியுடன் மலை உச்சிக்கு சென்று நள்ளிரவு 12.30மணிக்கு ராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
