தெலங்கானாவில் முன்னாள் அரசு அதிகாரியைச் சட்ட விரோதமாகச் சிறையில் அடைத்ததற்காக ஐஏஎஸ் அதிகாரிக்கு 30 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெகபூப் நகரைச் சேர்ந்தவர் முன்னாள் அரசு அதிகாரி பூச்சையா. இவர் அந்தப் பகுதியில் திருமண மண்டபம் ஒன்று கட்டி வருகிறார். திருமண மண்டபம் சட்ட விரோதமாகக் கட்டப்படுவதாக இணை ஆட்சியர் சிவக்குமார் நாயுடுவிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் 1ஆம் தேதி திருமண மண்டபத்தின் கட்டுமான பணிக்கு இடைக்கால தடை விதித்து இணை ஆட்சியர் சிவக்குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பூச்சையா. 2017 ஆகஸ்ட் 29ஆம் தேதி ஆட்சியரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.
இதனால், ஆத்திரமடைந்த ஆட்சியர் உள்ளூர் ஆய்வாளர் மூலம் பூச்சையாவை 2 மாதம் 29 நாட்களுக்குச் சிறையில் அடைத்தார். ஜாமீனில் வெளியே வந்த பூச்சையா, சிவக்குமாருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி நவீன் ராவ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆட்சியரின் செயல் பழி வாங்குவது மட்டுமில்லாமல், நீதிமன்ற அவமதிப்பாகவும் இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
இதையடுத்து, ஆட்சியருக்கு 30 நாட்கள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், பூச்சையாவுக்கு நிவாரண நிதியாக ரூ. 50,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
