பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 9ம் தேதி காலை, 10:00 மணிக்கும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 31ம் தேதி காலை, 9:15 மணிக்கும்


பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 9ம் தேதி காலை, 10:00 மணிக்கும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 31ம் தேதி காலை, 9:15 மணிக்கும் வெளியிடப்படுகின்றன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று
வெளியானது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச், 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. எட்டு லட்சத்து 4,534 மாணவ, மாணவியர், தேர்வை எழுதினர். இவர்களில், 3 லட்சத்து, 73 ஆயிரத்து, 788 பேர், மாணவர்கள்; 4 லட்சத்து, 30 ஆயிரத்து, 746 பேர், மாணவியர். 2,020 மையங்களில் தேர்வுகள் நடந்தன. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு, பொதுத் தேர்வுகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. பிளஸ் 2, கணிதத் தேர்வில், கடினமான கேள்விகள், நாமக்கல் மாவட்டத்தில், இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஆசிரியர்களே ஈடுபட்டது போன்ற சம்பவங்கள் நடந்தன. தேர்வு முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது என, தேர்வுத் துறை, விழிப்புணர்வு ஏற்படுத்திய போதும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, 300க்கும் அதிகமான மாணவ, மாணவியர், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர். மாநிலம் முழுவதும், 50க்கும் மேற்பட்ட மையங்களில், விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு, தற்போது, மதிப்பெண்களை தொகுக்கும் பணிகள், சென்னை, "டேட்டா சென்டரில்' நடந்து வருகிறது.
பத்தாம் வகுப்பு: பத்தாம் வகுப்பு தேர்வுகள், மார்ச், 27ல் துவங்கி, கடந்த, 12ம் தேதி வரை நடந்தன. 3,012 மையங்களில் நடந்த தேர்வில், 10 லட்சத்து, 68 ஆயிரத்து, 838 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்களில், 5 லட்சத்து, 43 ஆயிரத்து, 152 பேர், மாணவர்கள்; 5 லட்சத்து, 25 ஆயிரத்து, 686 பேர், மாணவியர். பத்தாம் வகுப்பு தேர்வுகள் அனைத்துமே, சொதப்பலாக நடந்தன. தமிழில், ஐந்து மதிப்பெண்களுக்கு உரிய விடைகளை நிரப்புவதற்கான வங்கி, "செலான்' வழங்காதது; கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில், விடைத்தாள் கட்டு, ரயில் தண்டவாளத்தில் விழுந்து சேதமானது; விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில், ஆங்கில விடைத்தாள் கட்டுகள் மாயம் என, தொடர் குளறுபடிகள் நடந்தன. இதன் பின், 66 மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்தன. பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி அறிவிக்கப்பட்டதால், முதலில், பிளஸ் 2 தேர்வு முடிவை, மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். மே, 9ம் தேதி வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக, ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது, அதே தேதியை இறுதி செய்து, தமிழக அரசு அறிவித்துள்ளது.
அமைச்சர் அறிவிப்பு: பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன், நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், "பிளஸ் 2 தேர்வு முடிவு, மே, 9ம் தேதி காலை, 10:00 மணிக்கும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 31ம் தேதி, காலை, 9:15 மணிக்கும் வெளியிடப்படும்' என, தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், வழக்கமாக, மே, 20ம் தேதிக்குள் வெளியாகும். இந்த ஆண்டு, மே, 31ம் தேதி வெளியிடப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள், இன்னும் சில மையங்களில் முடியவில்லை என, கூறப்படுகிறது. மேலும், பிளஸ் 2 தேர்வு முடிவிற்குப் பின், மதிப்பெண் சான்றிதழ்களை, மாவட்டங்களுக்கு அனுப்பும் பணிகள் இருப்பதன் காரணமாக, 10ம் வகுப்பு தேர்வு முடிவு, 10 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டதாக, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"முடிவுகளை அறிவதில் பிரச்னை ஏற்படாது': ஒவ்வொரு ஆண்டும், 40க்கும் மேற்பட்ட தனியார், "வெப்சைட்' நிறுவனங்கள் மூலம், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வுத் துறை இயக்குனரகத்திடம், உரிய கட்டணத்தை செலுத்தி, தேர்வு முடிவுகள் அடங்கிய, "சிடி'க்களை பெற்று, உடனடியாக அந்நிறுவனங்கள் வெளியிட்டன. இது, மாணவ, மாணவியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. மாணவ, மாணவியர், மதிப்பெண்களுடன் கூடிய முடிவை, உடனுக்குடன் அறிய முடிந்தது. இந்த ஆண்டு, தனியார் நிறுவனங்களுக்கு, தேர்வு முடிவு வழங்கப்பட மாட்டாது என்றும், அரசு இணையதளத்தில் மட்டும் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 8 லட்சம், 10 லட்சம் மாணவர்கள், ஒரே நேரத்தில், இணையதளத்தை முற்றுகையிட்டால், இணையதளம் முடங்கிவிடும் ஆபத்து உள்ளது.

பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா கூறியதாவது: தனியார் நிறுவனங்களுக்கு, தேர்வு முடிவை தரக்கூடாது என்ற எண்ணம், அரசுக்கு கிடையாது. அரசிடமே, போதுமான தொழில்நுட்ப வசதிகள் இருக்கும் போது, அரசு இணையதளத்தில் மட்டும் வெளியிடலாம் என்ற முடிவால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவை அறிவதில், மாணவர்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாது. "நிக்' (தேசிய தகவல் மையம்) மூலம், தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அனைத்துப் பள்ளிகளிலும், இணையதள வசதிகள் உள்ளன. மாணவர்கள், பள்ளிகளுக்குச் சென்றும், முடிவை அறியலாம். மேலும், தேர்வு முடிவுடன் கூடிய மதிப்பெண் பட்டியலும், பள்ளிகளுக்கு அனுப்பப்படும். அந்த பட்டியலையும், மாணவர்கள் பார்க்கலாம். இவ்வாறு சபிதா தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...