லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானதும், தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், அரசு அலுவலகங்கள், பொது இடங்களை ஆக்கிரமித்திருந்த, அரசு திட்டங்கள் மற்றும் மாநகராட்சி திட்டங்களை விளக்கும் ஆடம்பர 'பிளக்ஸ்' விளம்பரங்களை
அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் கலெக்டர் அலுவலகத்தில், அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் ஒவ்வொரு துறை சார்பில் பிளக்ஸ் விளம்பரம் வைக்கப்பட்டிருந்தது. அதேபோன்று, அரசுத்துறை அலுவலகத்தில் அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், பயனடைந்தவர்கள் விபரங்களையும் விவரிக்கும் வகையில், பிளக்ஸ் விளம்பரம் வைக்கப்பட்டது.
அரசு அலுவலகம் மட்டுமின்றி, ரோட்டோரத்திலும், பொது இடங்களிலும் மேயர், எம்.எல்.ஏ.,க்கள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் போட்டி போட்டு விளம்பரம் செய்துள்ளனர். போக்குவரத்துக்கும், பொதுமக்களும் இடையூறாக வைக்கப்பட்டிருந்த ஆளுங்கட்சி விளம்பரங்களை அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டினர்.
மாநகராட்சியின் திட்டங்கள், ஒவ்வொரு திட்டத்துக்கும் செலவிடப்பட்ட நிதி, கோவையில் செல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் பற்றி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள ௨௫௦ பஸ் ஸ்டாப்களில், ஆடம்பர விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இலவச பொருட்கள் வழங்கும் விழா, முதல்வர் பிறந்தநாள் விழா, அம்மா திட்ட முகாம்களுக்காக அந்தந்த பகுதிகளில் பிரமாண்ட விளம்
பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றையெல்லாம் விட கொடுமையான விஷயம், முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை ஒட்டி, கோவையிலுள்ள ஒரு அரசு சுவரையும் விட்டு வைக்காமல், ஆளுங்கட்சியினர் விளம்பரம் செய்துள்ளனர். பொள்ளாச்சி ரோடு, திருச்சி ரோடு, அவிநாசி ரோடுகளில் மையத்தடுப்பு சுவர்களையும் விட்டு வைக்காமல், சுவர் விளம்பரம் செய்துள்ளனர். சத்தி ரோட்டிலுள்ள டெக்ஸ்டூல் பாலத்தில் இருபக்கமுள்ள தடுப்பு சுவரில் எம்.எல்.ஏ.,க்களே சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆளுங்கட்சியினரே, மக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் பற்றி சிந்திக்காமல், ஆடம்பர விளம்பரங்கள் செய்து, முதல்வரின் விசுவாசத்துக்கு பாத்திரமானவர்கள் என, தங்களை அடையாளம் காட்டிக்கொண்டனர். அனுமதியற்ற விளம்பரங்களையும், காலாவதியான விளம்பரங்களையும் அகற்ற வேண்டிய அரசு அதிகாரிகள், எதையும் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியானது; தேர்தல் விதிமுறைகள் அனைத்தும், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக, தலைமை தேர்தல் கமிஷனர் அறிவித்தார்.
இதையடுத்து, மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகள் விழித்துக்கொண்டனர். கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, முதல்வர் படத்துடன் கூடிய விளம்பரங்களை அகற்றினர்.
'ரோட்டோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பரங்களை உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால், பிளக்ஸ் விளம்பரங்கள் மாநகராட்சியால் அகற்றப்படும்' என, எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பஸ் ஸ்டாப்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பரங்களை அகற்றவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, விளம்பர நிறுவனத்தினர் பஸ் ஸ்டாப்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுவர் விளம்பரங்களையும் கட்சியினரே அழித்து சுத்தம் செய்ய துவங்கியுள்ளனர்.
தேர்தல் விதிமுறைகளின்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பிளக்ஸ் விளம்பரம், சுவர் விளம்பரம் செய்யக்கூடாது. லோக்சபா தேர்தல் முடியும் வரை, அரசியல் கட்சியினரை, தேர்தல் அதிகாரிகள் எப்படி கட்டுப்படுத்த போகிறார்கள் என்பது தெரியவில்லை.
காரை ஒப்படைத்த மேயர்
தேர்தல் அறிவிப்பு வெளியானதும், கோவை மேயர் வேலுசாமி பயன்படுத்தும், மாநகராட்சிக்கு சொந்தமான, 'இனோவா' கார் சாவியை, மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்துக்கு கொடுத்தனுப்பினார். தேர்தல் முடியும் வரை, மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடக்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மண்டல தலைவர்கள், நிதிக்குழு தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளின் சாவியை, மாநகராட்சி அதிகாரிகள் வசம் ஒப்படைக்கவும், கவுன்சிலர்களின் வார்டு அலுவலகத்தை பூட்டி சாவியை ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, எம்.எல்.ஏ., அலுவலகங்களை பூட்டி சாவியை ஒப்படைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர்.