மாநிலம் முழுவதும் செயல்படும், அரசு பள்ளிகளின்
வளர்ச்சிக்காக, அமைக்கப்பட்ட கிராமக்கல்விக்குழுக்கள் கட்டுமானப்பணிகளில்
போதிய ஒத்துழைப்பு அளிக்காத காரணத்தால், தலைமையாசிரியர்கள் தவிக்கும் நிலை
ஏற்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ்
(எஸ்.எஸ்.ஏ.,), பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிவறை வசதி, ஆய்வகம், நுாலகம்
உட்பட அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும், பள்ளி மானியம், பராமரிப்பு
என, பல்வேறு திட்டங்களின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்படுகிறது.
இப்பணிகள், தலைமையாசிரியர்களின் பொறுப்பில் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு
வருகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, எஸ்.எஸ்.ஏ., நிதி கணிசமாக
குறைந்துள்ளது. கட்டுமானப்பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை காட்டிலும், ஒரு
மடங்கு அல்லது இரண்டு மடங்கு நிதி அதிகம் தேவைப்படுகிறது.
இந்நிலையில், கட்டுமானப்பொருட்களின் விலை
உயர்வு, பணியாளர்களுக்கான கூலி உயர்வு, கட்டுமானப்பொருட்கள் தட்டுப்பாடு,
தண்ணீர் வசதி இல்லாமை போன்ற பல்வேறு நடைமுறை சிக்கல்களால் கட்டடங்களை
கட்டி முடிக்க முடியாமல் பாதியில் நிற்கும் சூழல் நிலவி
வருகிறது.குறிப்பாக, சமீபத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்படுத்தும்
வகையில், பிரத்யேக கழிவறை வசதி ஏற்படுத்தி தருவதற்கு, இரண்டு கட்டமாக
பள்ளிகளுக்கு நிதி வழங்கப்பட்டது. இதன்படி, மாற்றுத்திறனாளி மாணவர்களின்
கழிவறைக்கு (ஒரு யூனிட்) 50 ஆயிரம் ரூபாய் வீதம், கோவை மாவட்டத்தில், 348
யூனிட்டுகள் பள்ளிகளில் அமைப்பதற்கு ஒரு கோடியே 74 லட்சம் நிதி
ஒதுக்கப்பட்டு, பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்கப்பட்டது.
ஒரு யூனிட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி மிகவும்
குறைவாக உள்ளதாக பல்வேறு தலைமையாசிரியர்கள் தெரிவித்ததுடன், இதற்கான
பொறுப்பை ஏற்கவும் தயக்கம் காண்பித்தனர். கோவை மாவட்டத்தில், 40 சதவீத
பள்ளிகளில் இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக தெரிகிறது.நிதி
பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில், கிராமக்கல்வி குழு உதவியுடன் பொதுமக்கள்,
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றின் மூலம் உதவி பெற்று
கட்டடப்பணிகளை கட்டுவது தலைமையாசிரியர்களின் பொறுப்பு.ஆனால், கிராமக்கல்வி
குழுக்களின் போதிய ஒத்துழைப்பு இன்றி பல இடங்களில் இப்பணிகள் செய்ய
முடியாமல் பாதியில் விடப்படுகிறது.
அனைத்து, கட்டுமானப்பணிகளுக்கும் இதே நிலை தொடர்ந்து வருகிறது.
தலைமையாசிரியர்கள் சங்க மாநில பொதுசெயலாளர்
சாமி சத்தியமூர்த்தி கூறுகையில்,'' கிராமக்கல்வி குழுவில், ஊர் தலைவர்கள்
அல்லது வார்டு கவுன்சிலர்கள் தலைவராகவும், பள்ளி தலைமையாசிரியர்கள்
செயலாளராகவும் உள்ளனர். பெற்றோர்கள் உட்பட 20 பேர் இக்குழு உறுப்பினர்களாக
இருப்பர். பெரும்பாலும், இக்கல்விக்குழு அரசியல்வாதிகளின் அதிகாரத்தாலும்,
செயல்பாடுகள் ஏதும் இன்றி உள்ளது. இந்நிலையில், கட்டுமானப்பணிகள்
தலைமையாசிரியர் ஒருவரின் தலையில் விழுவதால், மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
நிதி பற்றாக்குறையில், தமிழகத்தில் பல
பள்ளிகளில் கட்டுமானப்பணிகள் பாதியில் நிற்கிறது. இதற்கு,
தலைமையாசிரியர்களே பதிலளிக்கவேண்டிய சூழல் உள்ளது,'' என்றார்.