பரம்பரை பரம்பரையாக ஒரு நோய் அடுத்த தலைமுறைகளுக்கு வருவது சாத்தியம்தானா? அப்படி உருவாகும் நோய்களை குணப்படுத்த
ஏதாவது வழி இருக்கிறதா? இவற்றையெல்லாம் ஆராய்கிறது மரபியல் (Genetics) துறை. மேம்போக்காகப் பார்த்தால் சாதாரணமாகத் தெரியும் இதன் சேவை, இன்றைய காலக்கட்டத்தில் மனித இனத்துக்கும் மருத்துவத்துக்கும் மிகவும் அவசியமானது... தவிர்க்க முடியாதது. நம் அன்றாட வாழ்வியலில் தொடங்கி குளோனிங் ஆராய்ச்சி வரைக்கும் மரபியல் உதவுகிறது. ஒரு தலைமுறையின் குணாதிசயங்களையும் செயல்பாடுகளையும் தீர்மானிப்பது மரபணுக்களே. அத்தகைய மரபணுக்கள் பற்றிய அடிப்படையைப் படிப்பதற்கென இருப்பது மரபியல் துறை. சென்னை பல்கலைக்கழக மரபியல் துறைத் தலைவர் சந்தியா தான் மரபியலில் மயங்கிய கதையை இங்கே விரிவாகப் பேசுகிறார்...
‘‘சென்னையில நடுத்தரக் குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்தவள் நான். பள்ளிப்படிப்பு முடிந்ததும் பி.எஸ்சி., விலங்கியல் சேர்ந்தேன். அதிலேயே முதுகலைப் பட்டமும். சென்னை பல்கலைக்கழகத்தில் மரபியலில் எம்.பில். பண்ணினேன். தொடர்ந்து பி.ஹெச்டி.யும் இங்கேயே முடிச்சேன். ‘புற்றுநோய்க்கு சித்த மருத்துவத்திலும் தீர்வு இருக்கிறது’ என்கிற ரீதியில் நான் செய்த ஆய்வு பெரும் வரவேற்பைப் பெற்றது. தூதுவளை, சித்திரமூலம் ஆகிய இரு தாவரங்களில் இருந்து எடுத்த கலவை புற்றுநோயை குணப்படுத்தும் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தேன். இப்பவும் இந்த மருந்து பயன்பாட்டில் இருக்கிறது. இடையில் ‘கண்புரை நோய் பரம்பரை காரணங்களால் வருகிறதா’ என்கிற ஆய்வுக்காக ஜெர்மனிக்கு 2 வருஷம் போனேன். திரும்பி வந்த பிறகு, சென்னை பல்கலைக்கழகத்துல பேராசிரியர் வேலை கிடைத்தது. எனக்குப் பிடித்த மரபியல் துறையே 36 ஆண்டுகளாக என் வாழ்க்கையானது!
மரபியல் என்பது தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் என எல்லா உயிர்களுக்குமே பொதுவான ஒரு விஷயம். ஒரு விஷயத்தை பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு முன்னதாக, அதன் மரபைப் பற்றி ஆராய்வதுதான் சரியான தீர்வைக் கொடுக்கும். மரபியல், மனித சமூகத்துக்கு அத்தியாவசியமான ஒரு துறை. ஒரு குழந்தை பிறப்பதைத் தீர்மானிக்கும் குரோமோசோம்கள் தொடங்கி, தொடர்ந்து வழி வழியாக வரும் சந்ததியினரைப் பற்றிய தகவல்களை தாங்கிச் செல்வது ஜீன்கள்தான். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ளவர்களின் பழக்க வழக்கங்கள், உடல் அமைப்பு என எல்லாமே ஒரு பொதுத்தன்மையோடு இருக்கும். இதில் சில மாறுதல்கள் ஏற்படும்போதுதான் மரபியல் ஆராய்ச்சி வேண்டியிருக்கும்.
இப்போது மனித சமூகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சில நோய்கள் நம் மூதாதையர் விட்டுச் சென்றவை. பாதிக்கப்பட்டவர்களில் 25 முதல் 50 சதவிகிதம் பேர் பரம்பரை காரணங்களால்தான் நோய்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். ஒரு நோயின் தன்மையைத் தெரிந்து கொள்ள மரபியல் அவசியம். நீரிழிவு, கேன்சர், இதயக் கோளாறு, ஆஸ்துமா போன்ற நோய்கள் பரம்பரையாக தொடர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு அதிக பாதிப்பை உண்டாக்கும் மார்பகப் புற்றுநோய் காலங்காலமாகத் தொடர்ந்து வருவது வேதனைக்குரிய விஷயம். இப்போது அதிக பிரச்னைக்குரியதாக நாங்கள் கண்டறிந்துள்ள ஒரு விஷயம்... உரிய வயது கடந்தும் சில பெண்கள் பருவமடையாமல் இருப்பதுதான்.
16 வயது தாண்டியும் பெண்கள் பருவமடையாமல் இருந்தால் அது பரம்பரைக் காரணங்களால்தான் என்பதைக் கண்டறிந்திருக்கிறோம். ஆண்டுக்கு 10 சதவிகிதம் பெண்கள் இந்த பிரச்னையோடு வருகிறார்கள். பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தீர்மானிக்க முடியாத வகையில் பாலின உறுப்பில் குறைபாடுகள் இருப்பதும் தொடர்கதையாகவே இருக்கிறது. அவர்களுக்கு ‘கேரியோடைப்பிங்’ (Karyotyping) என்ற மரபியல் சோதனை செய்து அதன் முடிவுகளையும் ஆதாரங்களையும் கொடுப்போம். பாலினம் சார்ந்த நிறைய பிரச்னைகளை இன்றைய குழந்தைகள் சந்திக்கிறார்கள். ‘ஆம்பிகுவஸ் ஜெனிட்டாலியா’ (Ambiguous genitalia) என்ற ஆய்வைச் செய்து, அவர்களுடைய குறைபாட்டை சரி செய்வதற்கு மருத்துவமனைக்கு பரிந்துரைப்போம்.
இப்போது நாங்கள் அதிகம் எதிர்கொள்ளும் பிரச்னை குழந்தையின்மைக்கான காரணங்கள்தான். குரோமோசோம்குறைபாடு காரணமாக கரு தங்குவதில் பிரச்னை உருவாகிறது. இந்தப் பிரச்னையை சரி செய்ய மருத்துவத்துறைக்கு நாங்கள் உதவுகிறோம். ரத்தக்கொதிப்பு, குடல்வாய் புற்றுநோய், செர்விகல் கேன்சர் போன்ற நோய்களுக்கும் மரபியலுக்கும் தொடர்பிருக்கிறது. கண்புரை, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் வரும் என்று நமக்குத் தெரியும். இப்போதோ, 10 வயது குழந்தைகளுக்கே கண்புரை நோய் வருகிறது. கருவுற்றிருக்கும் பெண் அம்மை நோயால் பாதிக்கப்பட்டால், கருவிலிருக்கும் குழந்தையை வைரஸ் தாக்கும். இதன் மூலமாக குழந்தைகளுக்கும் கண்புரை ஏற்படுகிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இந்த நோய்கள் எப்படி வருகின்றன, பரவுகின்றன, எந்த மருந்து கொடுத்தால் சரியாகும் என்பதை எல்லாம் ஆய்வு செய்ய ‘ஞீமீதீக்ஷீணீ’ மீன் வகையை எடுத்துக் கொள்கிறோம்.
ஆய்வுக்கூடத்தில் இருக்கும் இந்த மீன்கள்தான் மனிதனின் மாதிரியாக இருக்கின்றன. அவற்றை முறையான சோதனைகளுக்கு உட்படுத்தி, பிறகு அந்த மருந்துகளை மனிதர்களுக்குக் கொடுக்க பரிந்துரை செய்வோம். மீனின் மரபணுவில், மனிதர்களின் மரபணுவை செலுத்தி அதன் மூலம் ஆய்வுகளை மேற்கொள்வோம். இங்கே நாங்கள் செய்யும் இன்னொரு முக்கியஆய்வு, வரப்போகும் தலைமுறைக்குப் பயனுள்ளதாக இருக்கும். யாருக்கு எந்த மருந்து சிறந்தது (Personalised Medicine) என்பதை அவர்களின் ஜீன்களை ஆய்வுக்கு உட்படுத்திச் செய்தோம். இதயக் குழாய் அடைப்புள்ள நோயாளிகளுக்கு ஏற்ற மருந்துகள் பற்றியது இந்த ஆய்வு. வருங்காலத்தில் இந்த முறையை மற்ற நோய்களுக்கும் கொண்டு வரத் திட்டம் இருக்கு. மரபணு மாற்றம் என்பது இப்போதைய சூழலில் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் ஆபத்துகளையும் சேர்த்துக்கொண்டே வருகிறோம்.
மாறிவரும் சூழல், கதிர்வீச்சு, செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், தொழிற்சாலை புகை, கழிவுகள் ஆகியவற்றால் நம் உடலில் பல மாற்றங்கள் உருவாகி, அது நம் உடல் அமைப்பையே மாற்றிவிடுகிறது. குறிப்பாக மைதாவில் உள்ள ‘அலோக்ஸான்’ என்ற வேதிப்பொருள்... ஆய்வு எலிகளுக்கு நீரிழிவு ஏற்படுத்தும் ஒரு பொருளாக இதைப் பயன்படுத்துகிறோம். அதையே நாம் தொடர்ந்து பயன்படுத்தினால் பரம்பரையாக இந்த நோய இல்லாதவர்களுக்கு கூட நீரிழிவுப் பிரச்னை வந்துவிடும்.
கருவுற்ற தாய் இதுபோன்ற தவறுகளைச் செய்தால், அது அடுத்தடுத்த தலைமுறையையே பாதிக்கும். உதாரணமாக... சின்னத் தலைவலிக்கு நாமாக மாத்திரை எடுத்துக் கொள்வது கூட ஆபத்துதான். அதனால், நம் நலனை மட்டும் நினைக்காமல், அடுத்த தலைமுறையையும் ஆரோக்கியமாக வாழ வைக்கும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். ‘மரபியல்’ பாடத்தைப் படித்ததால் இவ்வளவு மனிதர்களையும் இவ்வளவு அனுபவங்களையும் கடந்து வந்திருக்கிறேன். மரபு சார்ந்த விஷயங்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. அதில் நம் ஒவ்வொருவரின் பங்கும் இருக்கிறது’’ என்கிறார் சந்தியா.
தமிழகத்தில் இந்தப் படிப்பு முதுகலைப் பிரிவு, எம்.பில், பி.ஹெச்டி., ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகிறது. இளங்கலையில் உயிரியல், வேதியியல், தாவரவியல், மைக்ரோ பயாலஜி, பயோகெமிஸ்ட்ரி படித்தவர்கள் இத்துறையில் அனுமதிக்கப்படுவார்கள். சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பிரிவில் எம்.எஸ்சி., பயோ மெடிக்கல் ஜெனடிக்ஸ் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. நுழைவுத் தேர்வு மூலமே மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மதிப்பெண் அடிப்படையில் 3 மாணவர்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான (BC) ஒதுக்கீட்டில் 3 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பிரிவில் 2 பேர், ஆதி திராவிடர் (SC) பிரிவில் 1 மற்றும் பழங்குடியினர் (ST) பிரிவில் 1 என மொத்தம் 10 பேர் மட்டுமே படிக்க முடியும்.
போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி யில் எம்.எஸ்சி. ஹியூமன் ஜெனடிக்ஸ் என்ற பெயரிலும், வேலூர் விஐடி நிறுவனத்தில் முதுகலைப் படிப்பாகவும் வழங்கப்படுகிறது. சென்னை பல்கலைக்கழகத்தில் வருடத்துக்கு 8 ஆயிரம் ரூபாய் கட்டணம். தனியார் கல்லூரி களில் ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேசிய ஆய்வுக் கூடங்கள், டயக்னஸ்டிக் சென்டர், டயபடீக் ரிசர்ச் சென்டர்களில் வேலை கிடைக்கும். மருத்துவத்துறையோடு இணைந்து இயங்கும் இந்தத் துறைக்கு நல்ல எதிர்காலம் எப்போதும் உண்டு.
- எஸ்.பி.வளர்மதி
நன்றி குங்குமம் தோழி