மாறியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்குள் அது மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக புதன்கிழமை (மே 7) தென் தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மாநிலத்தின் பிற இடங்களிலும் பரவலாக மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். இதனால் மீனவர்கள் தென் தமிழக கடலுக்குள் பயணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீவிர காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறும் நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து சில நாள்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வுப் பகுதி காரணமாக செவ்வாய்க்கிழமை (மே 6) மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான விவரங்களின்படி நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், காரைக்கால், ராமநாதபுரம், தஞ்சாவூர், சிவகங்கை உள்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை இரவு மற்றும் அதிகாலையில் மழை பெய்தது. பகல் வேளைகளில் மேகமூட்டத்துடன் சிறிய தூறல் இருந்தது. கத்திரி வெயில் தொடங்கி, கோடையின் தாக்கம் உச்சமடைந்திருந்த நிலையில் குமரிக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக மாநிலம் முழுவதும் வெப்பநிலை குறைந்துள்ளது.
இது குறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியது:
மாநிலம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், குமரிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. அது தற்போது வலுவடைந்து அதே இடத்தில் நீடித்து வருகிறது.
இது நகரும் திசையைப் பொருத்து மழை வாய்ப்பு மாறுபடும். அடுத்த 48 மணி நேரத்துக்குப் பிறகே அது புயலாக மாறுமா என்பது குறித்து கணிக்க முடியும். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என்றார்