மக்கள் நல பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ், கி.வீரமணி வலியுறுத்தல்

கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மக்கள் நல பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ், கி.வீரமணி வலியுறுத்தியுள்ளனர்.


இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

மக்கள் நல பணியாளர் பணி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அனைத்து பணியாளர்களுக்கும் வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் வேலை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, மதுவிலக்கு குறித்த அரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ள நீதிபதிகள், இந்த பணியாளர்களை மது எதிர்ப்பு பரப்புரைக்கு பயன்படுத்திக்கொள்ளவும் ஆணையிட்டுள்ளனர். ஒரே ஆணையில் இரு நன்மைகளை செய்துள்ள இத்தீர்ப்பு பாராட்டத்தக்கது.

பணி நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவது குறித்த வழக்கின் தீர்ப்பில், தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படாதது குறித்தும், மதுவின் தீமைகள் குறித்து பரப்புரை செய்யாமல் மது விற்பனையை அதிகரித்து மக்களை கெடுப்பதில் அரசு கவனம் செலுத்தி வருவது குறித்தும் நீதிபதிகள் குறிப்பிட்டிருப்பது அவர்களின் சமூக அக்கறையை வெளிப்படுத்துகிறது. இந்த சமூக அக்கறை தமிழக அரசுக்கு இல்லாதது தான் அனைத்து சீரழிவுகளுக்கும் அடிப்படை ஆகும்.

மீண்டும் வேலை

இதை உணர்ந்து, மீண்டும் மீண்டும் தவறு செய்யாமல், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் பணி நீக்கப்பட்ட அனைத்து மக்கள் நலப்பணியாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்கி, அவர்களை மது எதிர்ப்பு பரப்புரையாளர்களாக அறிவிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படாதது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ள கவலையை உணர்ந்து தமிழ்நாட்டில் மதுவை அறவே ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்திய நாராயணன் அடங்கிய அமர்வு, வேலை நீக்கம் செய்யப்பட்ட, மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு ஆணை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்தத்தீர்ப்பை மதித்து வேலை நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களைப் பணியில் அமர்த்துமாறு முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம். மேல்முறையீடு என்னும் ஆயுதத்தைப்பயன்படுத்துவதால், நேரக்கேடும், அரசுப்பண விரயமும், பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மன உளைச்சலும்தான் மிச்சமாகும்.

நல்ல பெயரை...

பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக கிராமப் பகுதிகளில் இருந்து முதல் தலைமுறையாக அரசுப்பணியின் படிக்கட்டுகளை மிதித்தவர்கள் என்பதையும், சமூகநீதிக்கண்ணோட்டத்தில் அணுகி, அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி ஆட்சிக்கு நல்ல பெயரை சம்பாதிக்குமாறு வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...