தனியார் பால் விலையை லிட்டருக்கு ரூ.6 முதல் ரூ.8 வரை உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இதில் அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று பால்முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பால் விலை உயர்வு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 விலை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் கொள்முதல் விலை உயர்வை காட்டி தமிழக அரசு ஆவின் பால் விலையை நவம்பர் 1-ந் தேதி முதல் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியது.
ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்தியதை தொடர்ந்து, தற்போது தனியார் நிறுவனங்களும் பால் விலையை மீண்டும் உயர்த்த திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பாக பால் முகவர்கள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுச்சாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தனியார் பால்
தனியார் பால் நாளொன்றுக்கு தமிழகம் முழுவதும் 1லு கோடி லிட்டரும், சென்னையில் 25 லட்சம் லிட்டரும் சப்ளை செய்கிறது. அதேபோல், ஆவின் பால் மூலம் தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 21 லட்சம் லிட்டரும், சென்னையில் 11 லட்சம் லிட்டரும் சப்ளை செய்யப்படுகிறது.
அரசு நிறுவனமான ஆவின் மூலம் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.45-க்கும், சமன்படுத்தப்பட்ட பால் ரூ.41-க்கும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.37-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், மாத அட்டை வைத்திருப்பவர்களுக்கு, இந்த விலையில் இருந்து லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை குறைத்து வழங்கப்படுகிறது.
ஆனால், தனியார் பால் நிறுவனங்கள் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பாலை ஒரு லிட்டர் ரூ.48-க்கும், சமன்படுத்தப்பட்ட பாலை ரூ.44-க்கும், நிலைப்படுத்தப்பட்ட பாலை ரூ.40-க்கும், கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பாலை ரூ.34-க்கும் விற்பனை செய்கின்றன.
ரூ.6 முதல் ரூ.8 வரை உயர்த்த திட்டம்
இந்த நிலையில் தனியார் பால் கொள்முதல் விலையும், ஆவின் பால் கொள்முதல் விலையும் சரிசமமாக இருப்பதால் பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனத்துக்கே பால் கொடுக்க தொடங்கிவிடுவார்கள்.
எனவே தனியார் பால் விற்பனையாளர்கள், பால் உற்பத்தியாளர்களை தக்க வைத்துக்கொள்ளும் விதமாக பால் விலையை லிட்டருக்கு ரூ.6 முதல் ரூ.8 வரை உயர்த்த திட்டமிட்டிருக்கின்றனர். இதன்மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு விற்பனை விலையில் இருந்து 50 சதவீதம் தொகை கொள்முதல் விலையில் சேரும்.
இந்த ஆண்டில் மட்டும் கடந்த ஜனவரி, மார்ச், மே, அக்டோபர் ஆகிய மாதங்களில் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் பால் விலை உயர்த்துவது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.
அரசு தலையிட வேண்டும்
பஸ் கட்டணம், ஆட்டோ கட்டணம் போன்றவற்றை அரசு நிர்ணயம் செய்வது போல, தனியார் பால் விலை நிர்ணயம் செய்வதிலும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இதற்கு ஒரு தீர்வு ஏற்பட வேண்டும். இல்லையென்றால், இதேபோல் தொடர்ந்து பால் விலை உயர்ந்து கொண்டே இருக்கும். இதனால் பால் பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.
இந்திய பால் நிறுவனத்தை காப்பாற்ற பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பு வணிகர்களும் ஒன்றிணைந்து விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்க இருக்கிறோம். தொடர்ந்து தீர்வு ஏற்படவில்லை என்றால், உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.