கிறிஸ்துமஸ் தினத்தன்று பள்ளிகள் செயல்பட உத்தரவா?

கிறிஸ்துமஸ் தினத்தன்று பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி திங்கள்கிழமை மறுத்தார்.


இதுதொடர்பாக தில்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:

துரதிருஷ்டவசமாக, தவறான தகவல்கள் வேண்டுமென்றே பரப்பப்பட்டுள்ளன. தலைப்புச் செய்திகளுக்காக இதுபோல சர்ச்சைகள் உருவாக்கப்படுகின்றன. டிசம்பர் 25ஆம் தேதி, கிறிஸ்துமஸ் பண்டிகை தினமாகும். அன்றைய தினம் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியானதும், அதை மறுத்து எனது அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.

அதில், பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை, அடிப்படையற்றவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நடத்தும் ஜவாஹர் நவோதயா வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அந்தப் போட்டி, இணையதளம் மூலமாகவே நடத்தப்படும் என்றார் அவர்.

இதுதொடர்பாக சுட்டுரை (டுவிட்டர்) வலைதளப்பக்கத்தில் அவர் பின்னர் வெளியிட்ட பதிவுகளில், "கிறிஸ்துமஸ் அன்று அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும். கட்டுரைப் போட்டியானது, இணையதளம் வாயிலாக நடத்தப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.

பின்னணி: ஜவாஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு கடந்த வாரம் நவோதயா வித்யாலயா சமிதி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அதில்,

"முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினம் "நல்ல நிர்வாக தினமாக' கொண்டாடப்பட இருக்கிறது. அந்நாளைக் கொண்டாடுவதை அனைத்துப் பள்ளிகளும் உறுதி செய்ய வேண்டும்.

இதை முன்னிட்டு, டிசம்பர் 24, 25ஆம் தேதிகளில் பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும். அன்றைய தினத்தில், நல்ல நிர்வாகம் தொடர்பாக சிபிஎஸ்இ சார்பில் போட்டிகள் நடத்தப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.



கூச்சல், குழப்பம்

கிறிஸ்துமஸ் தினத்தன்று பள்ளிகளைத் திறக்க உத்தரவிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியான விவகாரத்தை மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை எழுப்பி அமளியில் ஈடுபட்டன.

இதனால், அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சீதாராம் யெச்சூரி பேசுகையில், "டிசம்பர் 25ஆம் தேதியன்று பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்' என்றார்.

இதைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசுகையில், "அந்த தகவல்கள் தவறானவை. அதுபோல எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

அன்றைய தினத்தில், பள்ளிகள் செயல்படாது. கட்டுரைப் போட்டிக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...