பேராசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பித்த பலரது விண்ணப்பங்களை விநோதமான காரணத்தைக் கூறி, அண்ணா பல்கலைக்கழகம் நிராகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்ச்சி பெற்ற ஆண்டு, மாதத்தைத்தான் கணக்கில் கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர்களே கூறும் நிலையில், சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியைக்
காரணம் காட்டி, விண்ணப்பத்தை பல்கலைக்கழகம் நிராகரித்திருப்பது கல்வியாளர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பல்கலைக்கழகத் துறைகள், 13 உறுப்புக் கல்லூரிகள், 3 மண்டல அலுவலகங்களில் காலியாக உள்ள 112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், 15 நூலகர் பணியிடங்கள், 11 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரத்தை கடந்த 11-7-2015 அன்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றது.
நிராகரிப்பு: விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 31-7-2015 கடைசித் தேதி என அறிவித்திருந்தது. அதோடு, இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 11-7-2015 அன்றைய தேதியில், உரிய கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் என அந்த விளம்பரத்தில் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியிருந்தது.
மேலும், உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் எம்.இ. முதுநிலை பொறியியல் படிப்பு முடித்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, 2015-ஆம் ஆண்டு எம்.இ. முடித்தவர்களும் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால், இவர்களில் பெரும்பாலானோரின் விண்ணப்பங்களை பல்கலைக்கழகம் நிராகரித்துள்ளது. இதில், எம்.இ. படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதல் ரேங்க் பெற்றவர்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதிர்ச்சி அளிக்கிறது: இதுகுறித்து பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொண்ட போது, உங்களுக்கு எம்.இ. சான்றிதழ் 2015, ஜூலை 20-ஆம் தேதியிலும், அதற்குப் பிறகும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பல்கலைக்கழகம் வெளியிட்ட விளம்பரத்தின்படி 2015 ஜூலை 11 தேதியிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ எம்.இ. சான்றிதழை நீங்கள் பெற்றிருக்க வேண்டும். எனவேதான், உங்களுடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என பல்கலைக்கழக அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:
எங்களுடைய எம்.இ. சான்றிதழில் தேர்ச்சி பெற்ற மாதம், ஆண்டு என்ற இடத்தில் -ஜூன் 2015- என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு இந்தச் சான்றிதழை பல்கலைக்கழகம்தான் காலம் தாழ்த்தி 20-7-2015 அன்று வழங்கியிருக்கிறது. எனவே, இந்தத் தேதியைக் காரணம் காட்டி, பணிக்கான விண்ணப்பத்தை நிராகரித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இதுபோல, 20-க்கும் மேற்பட்டோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றனர்.
சரியான தேதி எது?: இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கல்விச் சான்றிதழில் தேர்ச்சி பெற்ற மாதம், ஆண்டு என்ற இடத்தில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அதைத்தான், சம்பந்தப்பட்ட மாணவர் அந்தப் பட்டப் படிப்புக்கு தகுதி பெற்ற தேதியாக எடுத்துக்கொள்ள வேண்டும். சான்றிதழ் அவருக்கு விநியோகிக்கப்பட்ட தேதியை கணக்கில் கொள்ளக்கூடாது என்றார் அவர்.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் திருமகன் கூறியதாவது:
கல்விச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்ச்சி பெற்ற மாதம், ஆண்டு எதுவோ, அதையே குறிப்பிட்ட மாணவர் அந்தப் பட்டப் படிப்புக்கு தகுதி பெற்ற தேதியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாறாக, மாணவருக்கு கல்விச் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியை, தகுதி பெற்ற தேதியாக எடுத்துக் கொள்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பல்கலைக்கழகம் பல்வேறு காரணங்களால் கல்விச் சான்றிதழ் விநியோகத்தை தாமதப்படுத்தலாம். அதற்காக, முன்னரே அந்தக் கல்வித் தகுதியைப் பெற்றுவிட்ட மாணவருக்கான சலுகைகள் மறுக்கப்படுவது என்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை என்றார் அவர்.
கல்வியாளர்களின் எதிர்பார்ப்பு: தனியார் பல்கலைக்கழகங்கள் தேர்வு முடிவுகளை வெளியிட்ட ஒரு சில நாள்களிலேயே கல்விச் சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கி விடுகின்றன. ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை வெளியிட்டு குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்குப் பிறகே கல்விச் சான்றிதழ்களை வழங்குகிறது. இப்போது பாதிக்கப்பட்ட மாணவர்களில் பலர் ஜூன் மாதமே தேர்ச்சி பெற்று கல்வித் தகுதியைப் பெற்றுவிட்ட நிலையில், ஜூலை 20-ல் தான் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே, இந்த தேதியைக் காரணம் காட்டி விண்ணப்பத்தை நிராகரிப்பது நியாயமற்றது. எனவே, உரிய கல்வித் தகுதியுடைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை பல்கலைக்கழகம் மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.