டாஸ்மாக்: ரூ.180 கோடி இழப்பு!!!

தமிழ்நாட்டில் அதிக வருமானத்தை அள்ளும் ‘டாஸ்மாக்’ (TASMAC) எனப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் பணப்புழக்கம் தட்டுப்பாடு, சபரிமலை சீசன் எதிரொலியாக மதுபானம் விற்பனை நாள் ஒன்றுக்கு ரூபாய் 12 கோடி குறைந்துள்ளதாகவும், கடந்த 15 நாட்களில் ‘டாஸ்மாக்’ நிறுவனத்துக்கு சுமார் ரூபாய் 180 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



மத்திய அரசு ரூபாய் 500, 1,000 நோட்டுகளை வாபஸ் பெற்றுக் கொண்டதால் நாட்டில் பணப்புழக்கம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் சபரிமலை சீசனையொட்டி ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ‘டாஸ்மாக்’ மதுபான விற்பனை குறைவது வழக்கம். எனவே பணத்தட்டுப்பாடுடன், சபரிமலை சீசனும் வருவாய் இழப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. எப்போதும் பரபரப்புடன் விற்பனை நடைபெறும் ‘டாஸ்மாக்’ மதுபான கடைகளிலும் மதுபிரியர்கள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது.

‘டாஸ்மாக்’ கடைகளுக்கு மதுபிரியர்கள் வருகை குறைந்துள்ளதால், அரசுக்கு அதிகளவில் வருவாய் ஈட்டி தரும் ‘டாஸ்மாக்’ வருமானம் குறைந்துள்ளது. இதுகுறித்து ‘டாஸ்மாக்’ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: “தமிழ்நாட்டில் 6,200 ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் உள்ளன. வெளிநாட்டு மதுவகைகள் விற்பனை செய்யப்படும் ‘எலைட்’ மதுபான கடைகள் 26 இருக்கின்றன. இந்த கடைகளில் வார நாட்களில் தினமும் சராசரியாக ரூபாய் 82 முதல் 85 கோடி வரை மதுபானம் விற்பனை நடைபெறுவது வழக்கம். வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரூபாய் 100 கோடிக்கு மது வகைகள் விற்பனை இருக்கும். ரூபாய் 500, 1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதையடுத்து தற்போது ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டால் அன்றாடம் 15 சதவிகிதம் அளவுக்கு ‘டாஸ்மாக்’ மதுபான விற்பனை சரிந்துள்ளது. அதாவது, நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூபாய் 12 கோடி விற்பனை குறைந்துள்ளது. அதன்படி, கடந்த 15 நாட்களில் ‘டாஸ்மாக்’ நிறுவனத்துக்கு சுமார் 180 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.

‘டாஸ்மாக் மதுபான கடைகளில் பழைய ரூபாய் 500, 1,000 நோட்டுகள் வாங்கப்படுமா? மதுபான விற்பனையை அதிகரிக்க ‘ஸ்வைப்’ மெஷின் மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் திட்டம் உள்ளதா?’ என்று அந்த அதிகாரிடம் கேட்டதற்கு, “ரூபாய் 500, 1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியான கடந்த 8ஆம் தேதி அன்று இரவு மட்டும் ‘டாஸ்மாக்’ கடைகளில் ரூபாய் 500, 1,000 நோட்டுகளை ஊழியர்கள் பெற்றுக்கொண்டனர். 9ஆம் தேதியில் இருந்து ரூபாய் 500, 1,000 நோட்டுகளை வாங்கக்கூடாது என்று டாஸ்மாக் மண்டல மேலாளர்களுக்கு அவசர சுற்றறிக்கையை அனுப்பி வைத்தோம். எனவே 9ஆம் தேதியில் இருந்து டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 500, 1,000 நோட்டுகளை ஊழியர்கள் வாங்குவது இல்லை. கடையின் வெளியே ரூபாய் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்க மாட்டோம் என்று அறிவிப்பு நோட்டீஸும் ஒட்டுவதற்கு அறிவுறுத்தப்பட்டது” என்றார்.

இந்நிலையில் கையில் பணம் இல்லாதவர்கள் டெபிட், கிரெடிட் கார்டு மூலம் மதுபானம் வாங்க வருவார்கள். அதன் மூலம் டாஸ்மாக் வருவாய் இழப்பை சரிக்கட்டி, விற்பனையை அதிகரிக்க டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மதுவிலக்கு துறை அமைச்சர், டாஸ்மாக் நிறுவன தலைவர், நான்கு இயக்குநர்கள், ஒரு மேலாண்மை இயக்குநர் அடங்கிய குழு இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று அவர் கூறியுள்ளதால், தற்போது டெபிட், கிரெடிட் கார்டுகளை பெரும்பாலானோர் கையாளுவதால், ‘டாஸ்மாக்’ மதுபான கடைகளிலும் ‘ஸ்வைப் மெஷின்’ விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘எலைட்’ மதுபான கடைகளிலும், ‘டாஸ்மாக்’ நிறுவனத்தின் அனுமதியோடு ஓட்டல்களில் இயங்கும் மதுபான பார்களிலும் ‘ஸ்வைப் மெஷின்கள்’ பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...