கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் தொய்வு நிலை ஏற்பட்டது. முதல்–அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அந்தப் பதவியை ராஜினாமா செய்த பிறகு இந்த நிலை ஏற்பட்டது. காபந்து முதல்–அமைச்சராக அவர் நீடித்தாலும், முக்கிய சில
விஷயங்களில் முடிவுகள் எடுக்கப்படவில்லை.
எனவே 2017–18–ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) தயாரிக்கும் பணிகள் தொடங்காமல் இருந்தன. இந்த நிலையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் நிறைவேறி, முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அரசு பொறுப்பேற்றுள்ளது.
இதுவரை நிலவி வந்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வந்துவிட்டதால் பட்ஜெட் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. பொதுவாக ஜனவரியில் தொடங்கி பிப்ரவரி மாதங்களில் இந்தப் பணிகள் நிறைவு பெற்றுவிடும். ஆனால் தாமதமாக இந்தப் பணிகள் தொடங்கியுள்ளன.
என்றாலும், ஒரு சில வாரங்களுக்குள் இந்தப் பணிகள் நிறைவடையும் என்றும், மார்ச் மாதம் முதல் வாரத்தில் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தலைமைச் செயலக வட்டாரம் தெரிவித்தது