சட்டசபையில் இன்று (பிப்.,18) நடந்த களேபரத்தில் அம்பத்துார் போலீஸ் துணை கமிஷனர் சுதாகர் சட்டசபை காவலராக மாறுவேடத்தில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபையில் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. ரகசிய ஓட்டெடுப்பு நடத்த கோரி தி.மு.க,
எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர். எதிர்கட்சியினரின் கோரிக்கையை ஏற்க சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார்.
இதை கண்டித்து தி.மு.க., எம்.எல்.ஏ.,கள் சபாநாயகரை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால், கடுப்பான சபாநாயகர் சட்டசபை காவலர்கள் மூலம் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை குண்டு கட்டாக வெளியேற்ற உத்தரவிட்டார்.
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டசபை காவலர்களால் சட்டை கிழிக்கப்பட்ட நிலையில் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டார். தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், சட்டசபை காவலர்களாக போலீஸ் அதிகாரிகள் மாறுவேடத்தில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்பத்துார் போலீஸ் துணை கமிஷனர் சுதாகர் சட்டசபை காவலராக மாறுவேடத்தில் வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

