கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சல் (என்.சி.இ.ஆர்.டி) மற்றும்
மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) ஆகியவற்றை தவிர்த்து தனியார் வெளியீட்டாளர்களால் தயாரிக்கப்படும் விலையுயர்ந்த பாடப் புத்தகங்களை வாங்கச்சொல்லி மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கை அனுப்பியது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கம் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கிருபாகரன் முன்பு நேற்று (ஜூலை 29) வந்தது. அப்போது அவர், ‘சி.பி.எஸ்.இ. சங்கத்தில் 287 பள்ளிகள் உறுப்பினர்களாக உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை, 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறப்பித்த சுற்றறிக்கைக்கு முரணாக உள்ளது. புத்தகங்களின் தரம், அடக்கம் குறித்து மட்டுமே சரிபார்க்க வேண்டும். ஆனால், அவற்றைச் சரிபார்க்காமல், தனியார் நிறுவனங்களின் புத்தகங்களை வாங்குவதற்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அனுமதித்துள்ளது. இதில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம்மீது தான் தவறுள்ளது. என்.சி.இ.ஆர்.டி. மற்றும் தனியார் நிறுவனங்களின் புத்தகங்களை. சி.பி.எஸ்.இ. பள்ளிகள் வாங்க, 2014ஆம் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை அனுமதி அளிக்கிறது. ஆனால், தற்போது பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையில், விரிவான விவரங்கள் ஏதும் இல்லை. எனவே, அந்த சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. 287 பள்ளிகள் கொண்ட சங்கம், ஒரே மனுவைத் தாக்கல் செய்ததன் மூலம், அதன் உறுப்பினர் பள்ளிகள் அனைத்தும் பலன் பெறுகின்றன. சங்கத்தின் சார்பில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டதால் அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தலா 1,000 ரூபாய் என மொத்தம் 2.87 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். தவறினால், நீதிமன்றம் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும். மனுவுக்கு, சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க, ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிடப்படுகிறது” என உத்தரவு பிறப்பித்தார்.
இந்த மனு மீதான அடுத்த விசாரணை, ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
