நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க
வேண்டும் என்ற கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் இந்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்பிற்கு தேசிய தகுதி தேர்வு(நீட்) முறை கட்டாயமாக்கப்பட்டது. நீட் தேர்வினால் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வலியுறுத்தி வருகின்றனர். மேலும், தமிழக அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நீட் தேர்விற்கு விலக்களிக்க மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமரை சந்தித்து வலியுறுத்தினர்.
இந்நிலையில், இதுகுறித்து இன்று(ஜூலை 26-ஆம் தேதி) சென்னை கிரீன்வேஸ் சாலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “நீட் தேர்வை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், தமிழகம் மட்டும் தான் தனியாக நின்று நீட் தேர்வை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறது. சட்டமன்றத்திலேயே அறிவித்தோம், சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்த பின் மத்திய அமைச்சர்களைச் சந்தித்து நீட் தேர்விற்கு விலக்களிக்கும் மசோதாவை குடியரசுத் தலைவரிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று. அதே போல் சட்டமன்றம் நிறைவுற்ற அதே நாளில் தமிழக அமைச்சர்கள் ஐந்து பேர் மத்திய அமைச்சர்களைச் சந்தித்து வலியுறுத்தி வந்தனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து வந்தனர்.
மத்திய அமைச்சர்கள், இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தனர். எனவே, நீட் தேர்விற்கு எதிராகத் தமிழக அரசு மட்டும் தான் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெரும் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மேலும், நீட் தேர்வு குறித்து மத்திய அரசு கூடுதல் விவரங்களைத் தமிழக அரசிடம் கேட்டுள்ளது. மாணவர்களின் நலன் காத்து தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
)
