சத்துணவில் பசும்பால் சாத்தியமா?


பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளரும், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான
முரளிதர ராவ் மதுரையில் நேற்று (ஜூன் 6ஆம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“இந்து முன்னணி தலைவர் பண்டிட் தயாள் உபாத்யாயா நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், கட்சியைப் பலப்படுத்தும் வகையிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். தமிழக மக்கள் ஊழலற்ற மற்றும் நல்லாட்சியைத்தான் விரும்புகிறார்கள். எனவே, இதற்கு ஒரே தீர்வாக பாஜக மட்டுமே உள்ளது.

மேலும், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டத்தில் பசும்பாலையும் சேர்க்க வேண்டும். இதன்மூலம் மாணவர்களுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். அப்படி பாதிப்பு எதுவும் இல்லை. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சிறு குறு தொழில்கள் வளரும். இந்த வரி விதிப்பில் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் அதைத் திருத்திக்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

‘சத்துணவு திட்டத்தில் பசும்பாலையும் சேர்க்க வேண்டும்’ என்ற முரளிதர ராவின் கருத்து தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர், தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அவர்களிடம் பேசினோம்.

அப்போது அவர் கூறியதாவது: “ஆவினில் குறிப்பிட்ட அளவுதான் பால் கொள்முதல் செய்கிறார்கள். பால் அதிகளவு இருந்தால் அவர்களால் இருப்பு வைக்க முடிவதில்லை. எனவே உற்பத்தியாளர்களிடம் பால் வாங்காமல் திருப்பி அனுப்பி விடுகின்றனர். எனவே, அந்த பால் கெட்டுவிடும். அதை யாராலும் பயன்படுத்த முடியாது. இதனால் விவசாயிகளுக்குத்தான் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, சத்துணவில் பால் சேர்த்தால் அது விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும். தற்போது முரளிதர ராவ் தெரிவித்துள்ள இந்தக் கருத்தை வரவேற்கலாம்.



(முரளிதர ராவ் ,சு.ஆ.பொன்னுசாமி)

இதனால் விவசாயிகளுக்குப் பால் தேவை அதிகரிக்கும். எனவே விவசாயிகளுக்கு மாடு வளர்பதற்கான தேவை அதிகரிக்கும். ஆனால், இந்தத் திட்டத்துக்காக அரசாங்கம் விவசாயிகளிடம் இருந்து மட்டுமே பால் கொள்முதல் செய்ய வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் பலனடைவர். கொள்முதலை பன்னாட்டு நிறுவனத்தினரிடம் விட்டுவிடக் கூடாது. அதேபோல் நாட்டுப்பசுவை விவசாயிகள் எளிதாகப் பெற அரசாங்கம் வழிவகுக்க வேண்டும்.

ஆனால், மத்திய அரசே கலப்பின மாடுகளை அதிகரிக்க முயற்சி செய்து, தமிழ்நாட்டில் ரெட் ஹில்ஸ் மற்றும் பள்ளிகரணை ஆகிய இரண்டு இடங்களில் ஜெர்சி காளைகளை இறக்குமதி செய்கிறது. இறக்குமதி செய்த காளைகளின் விந்தணுக்களை எடுத்து நாட்டுப்பசுக்களில் செலுத்தி கலப்பினப் பசுவை உருவாக்குகின்றனர்.

அதேபோல், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மூன்று வருடங்களாக இதற்காக நாங்களும் கோரிக்கைகளை விடுத்து வருகிறோம். ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு 200 மிலி பால் தினமும் சத்துணவில் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால், அவர்கள் அந்த கோரிக்கையின்மீது கவனம் செலுத்தவில்லை.

எனவே, தற்போது முரளிதர ராவ் கருத்தை ஏற்று அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அதற்கு வரவேற்பு கொடுக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...