உலகையே அச்சுறுத்தும் ஜிகா வைரஸால் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்
ளதாகச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஜிகா என்ற புதிய வைரஸ் தென் அமெரிக்கா மூலம் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களே ஜிகா வைரஸையும் பரப்புகின்றன. உடலுறவு மூலமும் வைரஸ் தொற்றுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நோயால் பிரேசிலில் மட்டும் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, மெக்ஸிகோ, கொலம்பியா, ஈகுவாடார், வெனிசூலா, கயானா, பொலிவியா உட்பட 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜிகா வைரஸ் பரவியுள்ளது. அந்த நாடுகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்துள்ள அறிக்கையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதில் இரண்டு பேர் கர்ப்பிணி பெண்கள் என்று கூறப்பட்டது. இது கர்ப்பிணி பெண்களைத் தாக்கினால், கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை பாதிப்பு மற்றும் இறப்புகூட ஏற்பட நேரிடும். மேலும், ‘மைக்ரோசிபெலி’ என்ற பாதிப்பால் தலை சிறிதாகி குழந்தை பிறக்கும். அது குழந்தை வளர்ச்சிக்குப் பல வகைகளில் பாதிப்பை உண்டாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே நெட்றாபாளையத்தை சேர்ந்த 27 வயதான டைலர் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பிருப்பது தெரியவந்துள்ளது. இவர் முதலில் காய்ச்சல், கண் மற்றும் தோல் எரிச்சல், மூட்டுவலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள சுகாதார மையத்துக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.
பின் அவருடைய சிறுநீர், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்புள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சைக்குப்பின் அவர் உடல்நலம் தேறி வருகிறார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
ஜிகா பாதித்த இந்த நபர் வெளிநாடுகளுக்கு எங்கும் சென்றதில்லை. அதன்படி உள்நாட்டிலேயே இந்த வைரஸ் பரவலாக இருக்கக்கூடும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.