திருப்பூர், அரசு மகளிர் கலை கல்லுாரியில், போதிய வகுப்பறைகள் இல்லாததால்,
மரத்தடியில் பாடம் நடத்தும் அவலம் நிலவுகிறது.
திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தை ஒட்டி, எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலைக் கல்லுாரி செயல்படுகிறது. நடப்பாண்டு, அறிவியல், கணிதம், வரலாறு, புவியியல் உட்பட, 16 பாடங்களில், மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், மாணவியர் எண்ணிக்கைக்கேற்ப, கூடுதல் வகுப்பறைகள் இல்லாததால், சுழற்சி முறையில், ஒவ்வொரு நாளும், ஒரு பாடப்பிரிவு மாணவியர், மரத்தடியில் அமர வைக்கப்பட்டு, பாடம் நடத்தப்படுகிறது. இது, மாணவியருக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் கூறுகையில், ’கல்லுாரியில், வகுப்பறை பற்றாக்குறை உள்ளது; ஆயிரக்கணக்கான மாணவியர் படிக்கும் கல்லுாரியில், 20 கழிப்பறைகள் மட்டுமே இருக்கின்றன’ என்றனர்.
கல்லுாரி முதல்வர் கலாவிடம் கேட்டபோது, ”மத்திய அரசின் திட்ட நிதி, 70 லட்சம் மதிப்பில், புதிய வகுப்பறை கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில், மாநில அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில், மாணவியருக்கான வசதிகள் செய்து தரப்படும்,” என்றார்