நகை மற்றும் ரத்தின விற்பனை துறையின் ஒழுங்குமுறை அமைப்பாகச்
சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு பொது இயக்குநரகம் நியமிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி-யின் புலனாய்வு பிரிவாகச் சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு பொது இயக்குநரகம் உருவாக்கப்பட்டுள்ளது. நகை மற்றும் ரத்தின விற்பனை துறை சார்ந்த பண மோசடி மற்றும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குதல் சார்ந்த புகார்களை இந்த அமைப்பு கவனித்துக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்திருத்தத்தைக் கடந்த வாரம் நிதியமைச்சகம் மேற்கொண்டது.
இதன்படி நகை மற்றும் ரத்தின விற்பனை துறையின் ஒழுங்குமுறை அமைப்பாகச் சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு பொது இயக்குநரகம் செயல்படும். கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குதல் மற்றும் பண மோசடிகள் குறித்து நடவடிக்கை எடுக்க சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு பொது இயக்குநரகத்துக்குத் தேவையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.