கடலூரில் ‘நீட்’ தேர்வு தோல்வி பயத்தால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.
மே 22, 2018, 05:45 AM
நெல்லிக்குப்பம்,
கடலூர் உண்ணாமலைசெட்டி சாவடி பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி வசந்தி. இவர்களுடைய மகன் அருண்பிரசாத் (வயது 19). பாபு, புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். வசந்தி மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு மருந்துக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
அருண்பிரசாத் கடந்த 2016-17-ம் கல்வி ஆண்டில் சேலம் மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்தார். அப்போது நடந்த பொதுத்தேர்வில் அவர் 1,200-க்கு 1,150 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதையடுத்து மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ‘நீட்’ தேர்வை எழுதினார். ஆனால் அந்த தேர்வில் அருண்பிரசாத் தேர்ச்சி பெற வில்லை. இதனால் அவர் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த ஓராண்டாக சென்னையில் தங்கி, அங்குள்ள ‘நீட்’ தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இதற்கிடையே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற ‘நீட்’ தேர்வை அருண்பிரசாத் எழுதினார். பின்னர் அவர், பெற்றோருடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று ‘நீட்’ தேர்வு வினா- விடைகள் வெளியானது. அப்போது அருண்பிரசாத் தான் எழுதிய விடைகள் சரியாக உள்ளதா? என பார்த்தார். இதில் கணக்கு பாடத்தில் சரியான விடையை எழுதாதது தெரிந்தது. இதனால் மனமுடைந்த அவர் தனது உறவினர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு, தான் ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்து விடுவேன் என்று கூறி புலம்பியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருண்பிரசாத், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே மதியம் 2 மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வந்த வசந்தி, அருண்பிரசாத் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நெல்லிக்குப்பம் ரவிச்சந்திரன், காடாம்புலியூர் குமாரய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட அருண்பிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘நீட்’ தேர்வு தோல்வி பயத்தால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.